Friday, August 26, 2005

கௌசல்யாவுக்கு திரட்டிய உதவித் தொகை

***********************************************
எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவையும் அதன் தொடர்ச்சியான மற்றொரு பதிவையும் நீங்கள் படித்திருக்கலாம். அவற்றைப் படித்த வலைப்பதிவு நண்பர்கள் சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் சிலர் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர்.

உங்கள் தகவலுக்காக, இது வரை கௌசல்யாவின் கல்வி உதவிக்காக திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 28,000/- இது தவிர துளசி அவர்கள் "பொது உதவி" நிதியாக ரூ.3800/- அனுப்பியுள்ளார். உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கும் ராம்கிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !!! உதவி செய்தவர்கள் பெயர்கள் பின் வருமாறு:

ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ, பரணி, முகமூடி, துளசி, சங்கரபாண்டி, இரா.முருகன், திருமலை, சலாவுதின் பஷீர், டோண்டு, எஸ்.சங்கர் மற்றும் குழலி. இவர்கள் தவிர்த்து, மேலும் இரு (பெயர் கூற விரும்பாத) வலைப்பதிவு நண்பர்களும் பணம் அனுப்பியுள்ளனர். யார் பெயராவது விடுபட்டிருந்தால், மன்னிக்கவும். எனக்கு தனிமடலிட்டால், பெயரை பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள், மேலே சுட்டியுள்ள (கௌசல்யா பற்றிய) எனது முந்தைய இரு பதிவுகளை பார்க்கவும். அவற்றின் பின்னூட்ட களத்தில் பணம் அனுப்புவது குறித்த விவரம் தரப்பட்டுள்ளது. "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம். இன்னும் இரு வாரங்களுக்குள் உதவித் தொகையை கௌசல்யாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாட்டை நானும் ராம்கியும் செய்து வருகிறோம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

SHOT of the Day அல்லது நெத்தியடி !

**************************************
எனக்குத் தெரிந்த ஆசனம் --- சுஜாதா

சில தியான மையங்களில் 'குண்டலினி சக்தி' என்று கூறி நமது அடிவயிற்றிலிருந்து முதுகுத் தண்டு வழியாக மேலே பயணித்து நெற்றிக்கு வந்து ஒரு 'சூப்பர் பவராக' மாறும் என்கிறார்களே, அது எப்படி ? அது உண்மையா ?

--- ஆர்.பி.ராஜ்குமார், பரமக்குடி

சுஜாதா பதில் : இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எதையாவது எழுதப் போய் உலகெங்கும் யோகா கிளாஸ் நடத்தி (ஜல்லியடித்துக்) கொண்டிருப்பவர்கள் "உனக்கு இதைப்பற்றி தெரியவில்லை என்றால் வாயையும் குண்டலினியையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பது தானே" என்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஆசனம் சவாசனம்.

நன்றி: குமுதம்

Wednesday, August 17, 2005

கண்கள் குளமாகும், மனம் வெதும்பும் !

Image hosted by Photobucket.com


உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம் இது !!!

1994-இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கெவின் கார்ட்டர் என்பவர் எடுத்த, புலிட்ஸர் பரிசு வென்ற புகைப்படம் இது !!! இப்படம், கொடும்பசியால் பீடிக்கப்பட்ட ஒரு கறுப்பின பெண்குழந்தை, ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள ஒரு ஐக்கிய நாட்டு உணவு மையத்தை நோக்கி ஊர்ந்து செல்வதை சித்தரிக்கிறது.

படத்தில் காணப்படும் பிணந்தின்னிக் கழுகு குழந்தையின் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது !!! படத்தை எடுத்தவுடன் கார்ட்டர் அவ்விடத்தை விட்டு சென்று விட்டதால், அக்குழந்தையின் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியாமல் போனது.

மூன்று மாதங்களுக்குப் பின் கெவின் கார்ட்டர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார் !!!

The BOSS !

ஆதியில் மனித உடல் உருவாக்கப்பட்டபோது, உடலின் எல்லா அங்கங்களும் தாமே உடலின் தலைவராக (BOSS) இருக்க விரும்பின.

மூளை, "உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்துவதால், நானே பாஸ்!" என்றது. உடனே பாதங்கள், "நாங்கள் தான் அந்த மூளையையே சுமந்து, அது விரும்பும் இடத்துக்கு இட்டுச் செல்கிறோம். எனவே நாங்களே பாஸ்!" என்றன.

உடனே கைகள், "நாங்கள் வேலை செய்து பணம் ஈட்டுவதால், எங்களுக்கே பாஸ் ஆவதற்குரிய தகுதி உள்ளது!" என்று கூறின. அதைத் தொடர்ந்து, இதயம், நுரையீரல், கண்கள் என்று பல அங்கங்களும், தாங்களே பாஸ் ஆவதற்குரிய தகுதி உடையவை என்று கூற, சச்சரவு வலுத்தது.

இறுதியாக, ஆசனவாயில் (ஆ.வா), " ஏன், நான் பாஸ் ஆகக் கூடாதா?" என்றவுடன் மற்ற அங்கங்கள் இடிஇடியென சிரித்து, அதை ஏளனம் செய்தன !!! கடுப்பான ஆ.வா தன்னை இறுக மூடிக்கொண்டு வேலை நிறுத்தத்தில் இறங்கியது !

ஒரு சில நாட்களில், அதன் விளைவாக, கண்கள் பாரமாகி, கைகால்கள் தடுமாறி, இதயமும், நுரையீரலும், மூளையும் பாதிக்கப்பட்டு, உடல் பெரும் அவதிக்கு உள்ளானது. முடிவில், மற்ற அங்கங்கள் ஆலோசனை செய்து, ஆ.வா வுக்கு பாஸ் பதவியை தந்து விட இசைந்தன.

அன்றிலிருந்து, மற்ற அங்கங்கள் தங்களுக்குரிய பணியை சரிவர இடைவிடாமல் செய்ய, தலைவராகிய பாஸ் (என்பவர்!) ஓரிடத்தில் அமர்ந்தபடி, கழிவை வெளியேற்றுவதை மட்டும் செய்து வருகிறார் !!!

Sunday, August 14, 2005

நினைவெல்லாம் நித்யா! --- A SHORT story

குமுதத்தில் ஏதோ ஒரு வாரம் சினிமா தலைப்புக்களை வைத்து ஒரு பக்கக் கதைகள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன. அந்த உந்துதலில், அதே பாணியில், எனது ஒரு கதை(!) முயற்சி தங்கள் பார்வைக்கு !!! படித்து விட்டு அடிக்க வர மாட்டீர்கள் என்று ஒரு நம்பிக்கை தான் :-)
****************************************************
ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான். ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! சில வருடங்களாக பத்திரப்படுத்தியிருந்த கடிதங்களை கொண்டு செல்வதற்கு தயாராக வைத்திருந்தான். நித்யாவும் அவனும் சம்மந்தப்பட்டதையும், அக்கடிதங்கள் குறித்தும், யாரிடமும் சொல்வதில்லை என்று சமீபத்தில் அவளிடம் சத்தியம் செய்தது அவன் நினைவில் நிழலாடியது ! என்ன செய்வது ? 'மீறவேண்டிய கட்டாயம்' என்று நினைத்துக் கொண்டான்,

நித்யா அன்போடு வாங்கித் தந்த சந்தன நிறச் சட்டையை அணிந்து கொண்டான். அவனது ஒரு பிறந்த நாளுக்கு நித்யா வாங்கித் தந்த, இதுவரை அவன் அணிந்திராமல் வைத்திருந்த, கைக்கடிகாரத்தை கட்டிக் கொண்டான். ஒரு கோர விபத்தில் தன் தாய் தந்தையரை இழந்து, தற்கொலை வரை சென்ற அவனை மீட்டு, ஆறுதல் கூறி, மெல்லத் தேற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்ட நித்யாவின் உயர்ந்த குணம் யாருக்கு வரும் ? தான் வாழும் இந்த வாழ்க்கையே அவள் மீட்டுத் தந்தது தானே என்ற ஓர் எண்ணம் எழுந்து, தான் செய்யவிருக்கும் செயல் சரியானதா என்று மனதில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்க அவன் அப்போது தயாராக இல்லை !

திருமண மண்டபத்தில் ஜேஜே என்று கூட்டம் ! நித்யாவின் நலம் விரும்பிகள் தான் எத்தனை பேர் என்று எண்ணிக் கொண்டான். மணமேடையில் ஒரு தேவதை போல் நித்யா வீற்றிருந்தாள். 'என்ன ஒரு அற்புதமாக ஜோடிப் பொருத்தம்!' என்று ஆத்மா மலைத்துப் போனான். உடனே, தான் செய்ய இருப்பது சரி தானா என்ற தயக்கம் ஏற்பட்டது. அவனைப் பார்த்தவுடன், நித்யா, உணர்வை வெளிக்காட்டாமல், "உன்னை எதிர்பார்த்தேன், ஆத்மா ! பிரகாஷ¤க்கு உன்னை அறிமுகப்படுத்த வேண்டும், வா, வா" என்றாள்.

ஆத்மா நிதானமாக தான் எடுத்து வந்த கடிதக்கட்டை புது மாப்பிள்ளையின் கையில் அழுத்தி, "இது தான் நான் உங்களுக்கு தரும் மிகச் சிறந்த திருமணப்பரிசு !!!" என்றவுடன், நித்யா அவனை மிகுந்த சங்கடத்துடனும் குழப்பத்துடனும், கொஞ்சம் கோபத்துடன் நோக்குவதை பொருட்படுத்தாமல், "பிரகாஷ், நித்யா பல வருடங்களாக சேவை செய்து வரும் மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பேணும் மையத்தில், அவளது அன்பும், அரவணைப்பும், உந்துதலும் தந்த நம்பிக்கையில், தங்கள் வாழ்க்கை மெல்லத் துளிர்வதை உணரத் துவங்கியுள்ள பிஞ்சு ஜீவன்கள் நித்யாவுக்கு, பல சமயங்களில், தங்கள் கைப்பட எழுதியும் வரைந்தும் தந்த அன்பைச் சுமக்கும் கடிதங்கள் தான் இவை ! பாரதி கண்ட புதுமைப் பெண்ணை மனையாளாகப் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்" என்றான் !!!!!

பின் நித்யாவைப் பார்த்து, "என்னை மன்னித்து விடு, நித்யா! உன் நல்ல நண்பனான என்னால் இவ்விஷயத்தை உன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் சொல்லாமல் இருக்க முடியலை" என்று கூறி புன்னகைத்தான் !!!
****************************************************
என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 13, 2005

உதவிய நண்பர்களுக்கு நன்றி !

எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவை படித்ததன் தொடர்ச்சியாக சில வலைப்பதிவு நண்பர்கள் தங்களால் ஆன பண உதவி செய்ய முன் வந்துள்ளனர். உங்களில் பலர் இந்த எனது பதிவை தவற விட்டிருக்கலாம். அதனாலேயே, இந்த வேண்டுகோளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். ஒரு கணிசமான தொகை திரட்டியவுடன், அதை சென்னையில் உள்ள ஒரு பிரபல வலைப்பதிவர் ஒருவர் மூலம் கௌசல்யாவிடம் (அவருக்கு பயன் தரும் வகையில்) சேர்ப்பித்து விட ஆவன செய்கிறேன்.

இது வரை, பணம் அனுப்பிய திருமதி ஜெயஸ்ரீ(USA), திருமதி ரம்யா நாகேஷ்வரன், குழலி, திரு.டோண்டு ராகவன், எஸ்.சங்கர்(தில்லி), திருமலை ஆகியோருக்கு என் நன்றிகள். இதில் ஒத்துழைப்பு தரும் ராம்கி அவர்களுக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 07, 2005

1981 - A Love Story!

********************************************
இம்மாதிரி தலைப்பைப் பார்த்தவுடன், "கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா" என்று நினைத்தபடி, இப்பதிவுக்கு வருகை தந்த உங்களை நான் ஏமாற்றவே மாட்டேன் ! ஏனெனில், இது உண்மையாகவே ஒரு காதல் கதை சம்மந்தப்பட்டது தான் !!!

கொஞ்ச நாட்கள் முன், எங்கள் வீட்டுப்பரணை சுத்தம் செய்ய வேண்டி சில பழைய பெட்டி/டப்பாக்களை கீழே இறக்கி குடைந்து கொண்டிருந்தபோது, நான் முன்னொரு காலத்தில் (24 ஆண்டுகளுக்கு முன்!!!) எழுதிய சிறுகதை(யா?) ஒன்று தட்டுப்பட்டது. உடனே உங்கள் ஞாபகம்(!) தான் வந்தது! (வசமாக மாட்டினீர்களா ?). அக்கதை எழுதப்பட்டிருந்த மக்கிப் போயிருந்த காகிதங்களை ஸ்கேன் செய்து, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! என் கதை எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வதை விடுத்து, நான் பொறியியல் படிக்கச் சென்று விட்டது உங்கள் துரதிருஷ்டமே ;-)


ஒரு சின்ன பிரச்சினை! பழைய காகிதங்கள் என்பதால், கதையைப் படிக்க நீங்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். இன்னுமொரு பிரச்சினை (அதானே!). கதையின் முக்கியக் கட்டத்தில் (Turning Point!) எழுத்துக்கள் அழிந்து போயுள்ளன!!! இதுவும் உங்கள் துரதிருஷ்டமே ;-)

இருந்தாலும், 'என்ன எழுதியிருப்பேன்?' என்று என் பழைய ஞாபகங்களை கடுமையாக(!) அலசிக் கொண்டிருக்கிறேன் ! ஞாபகம் வந்தால் (வரும்!) 'யுரேகா!' என்று கூவியபடி வந்து பதித்து விடுகிறேன்! அதற்குள் உங்களுக்கு அது குறித்து ஏதாவது தோன்றினால், சொல்லுங்களேன். ஆனால், அதற்காக (அதாவது, சிறந்த கற்பனைக்காக!) "பாதி ராஜ்யம் தந்து, என் பெண்ணையும் கொடுப்பேன்" என்றெல்லாம் சொல்ல நான் ஒன்றும் சுஜாதா(!) கிடையாது! அதிகபட்சமாக, டிரைவ்-இன்னில் போண்டா, காபி வாங்கித் தர இயலும் !!! இனி, 1981 - A LOVE STORY .....
***************************************************

***************************************************

ரவியின் அப்பாவுக்கு ரவியின் காதல் விஷயம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யாராவது யோசித்துக் கூறுங்களேன், Please !!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, August 05, 2005

Two Images

ஆஹா !!!
ஐயோ !!!

சிந்திப்பதற்கு சில! - 1

1. முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின் உன்னை எள்ளி நகைப்பார்கள், பின் உன்னிடம் சண்டையிடுவார்கள், பின் நீ வெல்வாய் !!!
---- யாரோ

2. வாழ்க்கையை பின் நோக்கித் தான் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை முன் நோக்கியே வாழ வேண்டும் !!
--- யாரோ

3. நம்மில் வெளியே கடவுளை காண்பது சாத்தியமில்லை. நம் ஆன்மாக்களே, புறத்தில் காணப்படும் கடவுள்தன்மைக்கு ஊற்றாக விளங்குகின்றன. நாமே தலைசிறந்த கோயில் !!! அதன் திருவுருவப்படுத்துதல் என்பது நம் அகத்தில் நாம் காண்பதின் ஒரு மிக மெல்லிய நகலே !!!
--- சுவாமி விவேகானந்தர்

4. உங்களுக்கு புலப்படும் மொத்த ஒளியின் விளிம்பில் நின்று, அறிந்திராக் கருவெளியில் நீங்கள் அடியெடுத்து வைக்கத் தலைப்படும் நேரம், திடமான தரை முன் இருக்கிறது (அல்லது) பறக்க கற்றுத் தரப்படுவோம் என்று அறிவதே நம்பிக்கை எனப்படுவதாம்.
--- பார்பரா வின்டர்

5. நாம் செய்ய அச்சப்படும் விஷயங்களை செயல்படுத்துவதை, வாழ்நாள் முழுதும், ஒரு பழக்கமாக மேற்கொள்வதே வெற்றியின் திறவுகோல் !!!
--- டிரேசி

6. கல்வி என்பது போற்றுதலுக்குரியதே. அதே நேரத்தில், தெரிந்து கொள்ள அவசியமான விஷயங்களை கற்றுத்தர இயலாது என்பதை அவ்வப்பொழுது நினைவு கூர்வதும் மிக அவசியமே !!
--- ஆஸ்கார் வைல்ட்

7. இறுதியில் கணக்கில் கொள்ளப்படுபவை, உங்கள் வாழ்வின் வருடங்கள் அல்ல, வருடங்களில் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையே!!! --- ஆப்ரஹாம் லின்கன்

8. நமக்கு முன் இருப்பதும் பின் இருப்பதும் மிக மிகச் சிறியவை, நம்முள் இருப்பதைக் காட்டிலும் !!! --- எமெர்ஸன்

9. மக்கள் மலைகளின் உயரங்களையும், கடலின் பேரலைகளையும், நதிகளின் நீண்ட பாதைகளையும், நட்சத்திரங்களின் விநோத நகர்வுகளையும் கண்டு அதிசயிக்க அதிக தூரம் கடக்கிறார்கள். ஆனால், அதிசயிக்காமலேயே தங்களை கடந்து விடுகிறார்கள்!!!
--- அகஸ்டின்

10. மனப்பிறழ்வு என்பது, ஒரே காரியத்தை ஒரே மாதிரி செய்து, அதற்கு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதே !!!
--- ஐன்ஸ்டைன்

11. ஒரு விடயம் குறித்த உணர்வுகளும், அது குறித்த புரிதலும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை !!!
--- ரஸ்ஸல்

Wednesday, August 03, 2005

பிரமிக்க வைக்கும் கௌசல்யா !

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த, கௌசல்யா என்ற மாணவியைப் பற்றிய செய்தியை பலரும் படித்திருக்கலாம். இவ்விளம்பெண்ணின் சிறந்த கல்வியார்வமும், அயரா உழைப்பும், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதியும், தன்னடக்கமும், யாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். கௌசல்யா, சிறுவயதிலேயே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, அந்தியூர் கிராமத்தில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வரும், அவரது தாய்வழிப் பாட்டனாரால் வளர்க்கப்பட்டவர். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சமாளித்து, போராடி, 'மருத்துராக வேண்டும்' என்ற ஒரே குறிக்கோளோடு படித்தவர் !

கௌசல்யா, அந்தியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறையே 475/500 மற்றும் 1149/1200 என்று மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் ! கௌசல்யா, இயற்பியலில் 199 மதிப்பெண்களும், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், பொது நிழைவுத்தேர்வில் 98.33 மதிப்பெண்களும் பெற்றார் என்ற தகவல், கேட்பவரை வியப்பின் உச்சத்துக்கு இட்டுச் செல்லும் !!!

இவருக்கு, பெருமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், 'இளமையில் வறுமை' எனும் கொடுநோய் பெரும் தடைக்கல்லாக குறுக்கிட்டது. தனது அயரா உழைப்பு தந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணத்தில், கல்லூரிக்கு கட்ட வேண்டிய தொகை வேண்டி (ஏன், அந்தியூரிலிருந்து சென்னை செல்ல இரயில் கட்டணம் கூட கையில் இல்லாத நிலைமையில்!) பல இடங்களில் பணவுதவு கேட்டு அலைய வேண்டிய அவலநிலை இம்மாணவிக்கு ஏற்பட்டது பெரிய கொடுமை தான் !!!

கௌசல்யாவின் நல்ல நேரம், அந்தியூருக்கு வருகை தந்திருந்த மாநில மனித உரிமைக் கழக உறுப்பினர் திரு.சம்மந்தம் வாயிலாக, இம்மாணவியின் பரிதாப நிலைமை ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. நமது முதலமைச்சர் கௌசல்யாவை அழைத்து, கல்லூரிக்கான முதலாண்டு கட்டணத்திற்கும், புத்தகங்கள் வாங்கவும் பணவுதவி செய்தார். அதைத் தொடர்ந்து, மேலும் பல நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன் வந்தனர்.

கௌசல்யா, ஆகஸ்ட் 1-ஆம் தேதி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மாணவியாகச் சேர்ந்து, தனது குறிக்கோளின் முதல் இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டர் !!! கௌசல்யாவின் முகத்தில் இப்போது தான் புன்னகையை பார்க்க முடிகிறது !!! இதே போல். பல கௌசல்யாக்களுக்கு, அவர்கள் தொலைத்த புன்னகையை மீட்டுத் தர வேண்டிய கடமை, நம் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது !!!

நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, ஒரு உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கலாம் என்பது என் எண்ணம். நூறு பேர் தலா 500/- தந்தாலே, மொத்தம் 50,000/- திரட்டி விடலாம். உரியவரிடம் தொகையை சேர்ப்பிப்பது மற்றும் அத்தொகை அம்மாணவிக்கு நல்ல வகையில் பயன் தருமாறு செய்வதும் குறித்து பின்னர் முடிவு செய்யலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails